ஈரோடு டிச 4:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விபரங்களை சேகரிக்கும் வகையில், ரேசன் கடைகளில் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்கள், வீடு வீடாக சென்றும், நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்படாமல் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தடுப்பூசி குறித்த படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,157 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோக்கும் போது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும், தடுப்பூசி தொடர்பான படிவங்களை கொடுத்து அதனை பூர்த்தி செய்து கொடுக்குமாறு ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.
படிவத்தில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்கள், வயது, செல்போன் எண்கள், முதல் தவணை தடுப்பூசி போட்ட நாள், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்ட நாள், தடுப்பூசி போடவில்லை என்றால் அதற்கான காரணம் ஆகியவற்றை நிரப்பி கொடுக்க படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த படிவத்தை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பூர்த்தி செய்து மீண்டும் ரேஷன் கடையில் வழங்க வேண்டும். இதன் மூலம் அந்த குடும்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நிலவரம் தெரியவரும் என்றும், தடுப்பூசி போடவில்லை என்றால் அதற்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnpds.gov.in , https://www.tnhealth.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/