ஈரோடு சூலை 18:

தென்மேற்கு பருவமழை துவங்குவதால், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, அடுத்தக்கட்ட பணியாக டெங்கு தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் உள்ள 60 வார்டுகளிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் சாக்கடைகளை தூர்வாரும் பணியும், டெங்கு தடுப்பு பணியாக வீடு, வீடாக சென்று ஆய்வு கொசு ஒழிப்பு, கொசு புழுக்கள் அழிப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை 4 மண்டலங்களின் உதவி கமிஷனர்கள் தலைமையில் பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது:-

மாநகராட்சி பகுதியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், டெங்கு தடுப்பு பணியும் துவங்கப்பட்டு வீடு, வீடாக சென்று களப்பணி மேற்கொள்ள அதற்கென 4 மண்டலங்களிலும் 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து கொசுப்புழு, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் வீட்டினையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காமல், கொசுக்கள் உற்பத்தியாகமல் வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் டேங்குகளை முறையாக மூடி பராமரிக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் பழுதான வாகன டயர்கள், தண்ணீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக பிரிட்ஜில் பின்புறம் தேங்க கூடிய தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்திட வேண்டும். இதனை கள பணியாளர்கள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள். இந்த பணிகள் பருவமழை சீசன் நிறைவடையும் வரை தீவிரமாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today