ஈரோடு அக்.16:
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
தற்போது வடகிழக்கு பருவமழை பொழிவு இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே கொசு ஒழிப்பு பணியில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மழை காலத்தில் கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளை சுற்றியுள்ள திறந்தவெளி பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் சேமித்து வைக்ககூடிய தொட்டிகள், டிரம்கள், டேங்குகள் ஆகியவற்றில் கொசு உட்புகாத வகையில், மூடி வைக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். குளிர்சாதன பெட்டியில் பின்புறம் உள்ள நீரையும் அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், டீ கப்புகள், இரும்பு பொருட்கள், பழைய டயர்கள், பானைகள், தொட்டிகள், ஆட்டு உரழ்கள், தேங்காய் தொட்டிகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.
குடிநீர் குழாய்களுக்கு அருகில் உள்ள குழிகளில் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால் அவற்றினை கண்டறிந்து தண்ணீர் தேங்காதவாறு சரிசெய்யவேண்டும். குடிநீரை காய்ச்சி அருந்தவேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறது. தனியார் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டுமான பகுதிகளில் கொசு உற்பத்தி ஆகும் வகையில் நீரை தேங்கவிடக்கூடாது. கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் உரிமையாளர் மீது பொதுசுகாதார சட்டம், தொற்றுநோய் பரப்புதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.https://www.tn.gov.in, https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/