ஈரோடு டிச 9:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 53 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை மாவட்ட துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காய்ச்சல் தடுப்பு பணிகள் அரசு உத்தரவின் பேரில், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளுக்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்களில் 1,200பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், டெங்கு தடுப்பு மற்றும் வீடு வீடாக சென்று ஏடிஸ் கொசுப்புழுக்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு பாதிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், தற்போது, மழையின் காரணமாக மாவட்டத்தில் 55பேருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை மாவட்ட துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஒமைக்கரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட 69பேர், தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு தற்போது வரை எவ்வித தொற்றும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க டெங்கு தடுப்பு பணியிலும் மாவட்டம் முழுவதும் கவனம் செலுத்தி வருகிறோம். மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 53 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், கடந்த மாத இறுதியில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் நடப்பாண்டில் யாரும் உயிரிழக்கவில்லை. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், வீட்டின் சுற்றுப்புறத்திலும் மழை நீர் மற்றும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து, தினந்தோறும் 20க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வரை 55க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள், படுக்கைகள் அமைக்கப்பட்டு காய்ச்சலனினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/