சித்தோடு ஆக 31: குழந்தைகளுக்கென தமிழ்நாடு சத்துணவு திட்டத்தின் கீழ் ஆவின் பாலை வழங்க வேண்டும், ஆவின் பாலுக்கான விலை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி, ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகம் முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார்.தமிழகத்தில் தவிடு, புண்ணாக்கு, கலப்பு தீவனம், உலர் தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக அரசு பால் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என உயர்த்தி, பசும் பால் ஒரு லிட்டர், 42 ரூபாய்க்கும், எருமை பால், 51 ரூபாய் என்ற கொள்முதல் விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் புதிதாய் அமைந்துள்ள தி.மு.க., அரசால் ஒரு லிட்டருக்கு 3 ருபாய் வீதம் குறைந்து விற்பனை விலை குறைக்கப்பட்டதால், ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டு 300 கோடி ருபாய் இழப்பு ஏற்படும். இதனை ஈடுகட்ட தமிழக அரசு மானியமாக வழங்கி, ஆவினுக்கு உதவிட வேண்டும்.

ஆவின் பால் நிறுவனத்தாருக்கு பாலை உற்பத்தி செய்து வழங்கப்பட்ட பாலுக்கான 500 கோடி ரூபாய் அளவில் நிலுவையில் இருந்து வரும் நிலுவை தொகைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.இந்த நிலுவை தொகைகளை வங்கிகளின் மூலம் செலுத்தாமல் அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் வாயிலாகவே வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்களால் ஒன்றியங்களை பிரிப்பதில், அவற்றிற்கான புதிய ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகளை கலைப்பது குறித்து  விரிவான விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவின் நிறுவனத்தில் சமீப காலமாக நிலவும் ஊழல், ஊதாரி தனங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

பால் கொள்முதல் அளவை நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க செய்ய வேண்டும்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஆவின் நிறுவனத்தார் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பாலின் கொள்முதலில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகளை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.மாவட்ட தலைவர் வெங்கிடுசாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் விஜயகுமார், பெரியசாமி, செல்லிகவுண்டர், ஆனந்தராசு, செல்வராசு உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே.
https://www.erode.today/