ஈரோடு டிச 21:

ஈரோட்டில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் மேசப்பன் முன்னிலை வகித்தார். இதில், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் (ரேசன் கடை) தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் ரேசன் அட்டை தாரர்களுக்கு விநியோகிக்க வழங்கப்படும் பொருட்களை தனித்தனியாக பேக்கிங் செய்து வழங்க வேண்டும்.

தொடக்க கூட்டுறவு சங்கங்களில் அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பப வேண்டும். கூடுதல் பொறுப்பாக கவனித்து வருபவர்களுக்கு 30சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செயவ்திலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்று தர வேண்டும்.

சங்கங்களில் 2020-–2021ம் ஆண்டிற்கான இறுதி தணிக்கை முடிவுற்ற நிலையில், அதற்கான தணிக்கை அறிக்கையை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிவரன்முறை செய்து, பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும். அரசு நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 1.-11.-2021ம் தேதி வரை வட்டி வழங்குவதாக தெரிவித்ததை, தள்ளுபடி தொகை விடுவிக்கும் நாள் வரை சங்கங்களுக்கு வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும்.

தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு கொரோனா காலத்தில் ரேசன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதற்கு, முதன்மை சங்கங்களில் இருந்து விளிம்புத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னிச்சையாக ஆண்டு இலக்கு நிர்ணயித்து, அதனை அடைய நிர்பந்தம் செய்து பணியாளர்களை அதிகாரிகள் ஒருமையில் பேசி வருவதை தடுத்து, பணியாளர் நலன் பாதுகாத்திட வேண்டும்.

பயிர்கடன் வழங்குவதில் மாநில அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் ஜன. 5ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர்கள் அருணாச்சலம், மாரிமுத்து, இணை செயலாளர்கள் சாரதாமணி, ரமேஷ், பொருளாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tncu.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today