ஈரோடு சூலை 18:

ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வேந்தர் தொலைக்காட்சியில் ஈரோடு மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து மறைந்த செய்தியாளர் ராஜேந்திரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, செய்தியாளர் ராஜேந்திரனின் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் படி, உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த இரங்கல் கூட்டத்தில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, கேபிள் டிவி நிறுவன சேர்மன் குறிஞ்சி.என்.சிவகுமார், மொடக்குறிச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., சரஸ்வதி, தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் மேயர் குமார், முருகேஷ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today