ஈரோடு ஆக 20:
அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையிலான திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் 10 மலைக்கிராமங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கி உள்ளது.
இதில் குறிப்பாக சம உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடிவாழும் உரிமை, வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதி கோரும் உரிமை உள்ளிட்டவைகள் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளாக கருதப்படுகின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமைகள் குறித்து குழந்தை பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்கும் வகையில், அரசமைப்பு உரிமை கல்வி திட்டம் எனும் தொலை நோக்கு திட்டம் தமிழகம் மற்றும் புதுவையில் 15 மாவட்டங்களில் 125 கிராமங்களில் வருகின்ற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் 10 மலைக்கிராமங்களில் சுடர் தொண்டு நிறுவனம் முன்னெடுத்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி பர்கூர் பகுதியில் உள்ள கொங்காடை, தம்புரட்டி, தாமரைக்கரை, பர்கூர், தேவர்மலை ஆகிய மலைக்கிராமங்களிலும், கடம்பூர் பகுதியில் பவளகுட்டை, அட்டணை, ஒசப்பாளையம், கானகுந்தூர், நகலூர் என மொத்தம் 10 மலைக்கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today