ஈரோடு ஆக 19:

ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ரகுராமன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: ஈரோட்டில் கடந்த, 1954ல் துவங்கப்பட்ட சி.என்.கல்லுாரியை அரசு கல்லுாரியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த, 15 ஆண்டாக ஈரோட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் போராடி வருகிறது. இக்கல்லுாரியை அரசு கல்லுாரியாக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் அரசு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும், அரசு கல்லுாரியாக மாற்றப்படவில்லை.

இதனை அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமியும், அரசு கல்லுாரியாக்கப்படும் என உறுதியளித்தும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சி.என்.கல்லுாரி விளையாட்டு திடலில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அக்கல்லுாரி நிர்வாகிகள், மாணவ, மாணவியர், பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, 1982ல் பஸ் ஸ்டாண்டுக்கு ஈரோடு சந்தை கூடும் இடம் தேர்வு செய்யப்பட்டது. 40 ஆண்டாகியும் ஈரோடு சந்தைக்கு மாற்று இடம் நிர்வாகத்தால் ஒதுக்கவில்லை.

எனவே, தற்காலிக ஏற்பாடாக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டால், கல்லுாரியின் அமைதி சூழல் குலைந்துவிடும். நகரின் மையத்தில் சி.என்.கல்லுாரி அமைந்ததன் நோக்கம், பஸ் ஸ்டாண்ட் மாற்றப்படும்போது நோக்கமும் மாறிவிடும். எனவே, அம்முயற்சியை கைவிட வேண்டும். ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சி.என்.கல்லுாரியை அரசு கல்லுாரியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today