ஈரோடு ஆக 6:

50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மேல் அனுமதித்தால் சீல் வைக்கப்படும் என்று வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மெல்ல உயர தொடங்கி உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சளி, காய்ச்சல் தொடர்பாக வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 300 ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இதே போல வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், பின்பற்றாத கடைகள் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது, கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

நாளொன்றுக்கு 350 பேருக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகின்றது. வணிக நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையளர்களுக்கு மேல் அனுமதித்தால் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல மாஸ்க் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களை உள்ளே எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும், அவ்வாறு அனுமதித்தால் சம்மந்தப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்பு மூலம் சுத்தம் செய்வதை ஓட்டல் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும். கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தும் நிலை தற்போது ஈரோட்டில் இல்லை.

ஆனால் பொதுமக்கள் முறையாக தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டிய சூழல் வந்துவிடும். எனவே பொதுமக்கள், வணிகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today