ஈரோடு நவ 2:

கொரோனா தடுப்பூசி போடுவதில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 3வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இனிப்புகள் வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றதோடு, வகுப்பறைகளில் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது,தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1306 பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு இன்று (நேற்று) வந்துள்ளனர். பல மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் வந்துள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முதல் தவணை தடுப்பூசி 73 சதவீதம் பேர் போட்டுள்ளனர். இரண்டாம் தவணை 30 சதவீதத்திற்கு மேல் போட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதில் மாநில அளவில் ஈரோடு 3வது இடத்தில் உள்ளது. தற்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்குசாவடிகள் வாரியாகவும், வாக்காளர் பட்டியல் அடிப்படையிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.

இது வரை முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார். https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/