ஈரோடு ஆக 14:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்தது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பி பிரிவில் உள்ள ஒரு வீதியில் 4 வீடுகளில் வசித்த 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநகர் பகுதியில் தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென ஒரே பகுதியில் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தொற்று ஏற்பட்டவர்களில் இரண்டு பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் அவரவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் அந்த  வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மாநகராட்சி பணியாளர்கள் 24 மணி நேரம் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர்.

பாதிப்பு ஏற்பட்ட உடன் அவர்களுடன் தொடர்பில் இருந்த 400 பேருக்கு 7 மருத்துவ குழுக்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்று மாலை தெரியவரும்.இந்நிலையில் இவர்களுக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. நான்கு வீடுகளில் ஒரு வீட்டைச் சேர்ந்தவரின் மகன் விளையாட வெளியே சென்று வீட்டுக்கு வந்துள்ளான்.

அப்போது அவனுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது பெற்றோர், மகனுக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டு அருகே மற்ற மூன்று வீடுகளில் இருந்தவர்களுக்கும் அடுத்தடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஒருவர் கருங்கல்பாளையத்தில் நகைக்கடை வைத்துள்ளார். அந்த நகை கடையும் பூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது:- 11  பேருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என் முடிவுகள் இன்று மாலைக்குள் வந்துவிடும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மக்களுக்கு தேவையான உதவிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை முடிவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தகுந்தார்போல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் பிள்ளைகள் வெளியே சென்று விளையாடுவதை  முடிந்த அளவு அனுமதிக்கக் கூடாது. நாம் செய்யும் சிறு தவறு பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today