ஈரோடு செப் 10:

ஈரோட்டில் கொரோனா இரண்டாம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைத்து தர வயதினரையும் தொற்று தாக்கியது. நீண்ட நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் தொடர்ந்து இருந்து வந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய கடைவீதிகள் அனைத்தும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது.

இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது. கிட்டத்தட்ட கடந்த 2 வாரமாக தொடர்ந்து தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 117 ஆக இருந்த நிலையில் நேற்று மேலும் 13 அதிகரித்து 130 ஆக உயர்ந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 99 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 126  பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 662 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/