ஈரோடு சூலை 10:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த போதிலும் கட்டுப்பாடுகள் என்பது தொடரும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 91 ஆயிரத்தை கடந்துவிட்டது. கொரோனா பரவல் உச்சகட்டமாக இருந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு மாவட்டத்தில் 1,700 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில், அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள், கடுமையான நடவடிக்கைகளால் மெல்ல குறைந்து தற்போது நாளொன்றுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 250க்கும் குறைவாக உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்துள்ள போதிலும் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளால் கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்து கட்டுக்குள் இருந்து வருகின்றது. ஆனாலும் அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகள் தொடரும். தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா என்பது குறித்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. கருப்பு பூஞ்சை பாதிப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதும், தனி நபர் இடைவெளி பின்பற்றுவதும் மிகவும் அவசியமாகும். கொரோனா 3வது அலை வந்தாலும் சமாளிக்கும் அளவிற்கு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் சுழற்சி முறையில் போடப்பட்டு வருகின்றது. பெருந்துறையில் ரோட்டரி சங்கம் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையை அரசு ஏற்றுக்கொள்வதா அல்லது ரோட்டரி சங்கம் நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே