ஈரோடு செப் 18:

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் 21ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சி.பி.எம்.,) மாநில துணை தலைவர் முனுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சி.பி.ஐ.,) மாநில துணை தலைவர் துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லியில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களையும், மின் திருத்த சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இப்போராட்டத்தில் தமிழகம் சார்பில் பல்வேறு விவசாய அமைப்புகள், பொது அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன. இப்போராட்டத்தை சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற கூட்டமைப்பு நடத்துகிறது. இந்த கூட்டமைப்பின் கீழ் செயல்பட விரும்பும் தமிழகத்தில் உள்ள உழவர்கள் அமைப்பு, விவசாய தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் தமிழகத்திலும் எஸ்.கே.எம்., அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் வருகின்ற 21ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடக்கும் மாநாட்டை பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். எஸ்.கே.எம்., தலைமை செயல்பாட்டு குழு உறுப்பினர் ஹனன்முல்லா பேசுகிறார். விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொது அமைப்புகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/