ஈரோடு சூலை 24:

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரையும் முதலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து பின்பு கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் இயங்கும் போது பணியாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

அனைவரும் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை சரிபார்த்த பின்னரே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் தங்குமிடம், கழிவறைகள் மற்றும் தொழிற்சாலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களை பணிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகள் உரிய முறையில் அமல்படுத்தப்படுகிறா? என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காதவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today