ஈரோடு ஆக 30: ஈரோடு மாவட்டத்தில் செப்., 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கு சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, வகுப்பறைகள், உணவு கூடம், சைக்கிள் நிறுத்துமிடம், விளையாட்டு மைதானம் போன்றவைகளை ஆய்வு செய்தார்.
பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாக அல்லது இணைய வழி வகுப்புகளை நடத்தலாம். பள்ளிக்கு வராமல் இணைய வழி வகுப்பை தொடர மாணவர்கள் விரும்பினால், அவர்களை அவ்வாறு பங்கேற்க அனுமதிக்கலாம். பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை, மாணவர்கள், ஆசிரியர் எண்ணிக்கைக்குஏற்ப, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி திட்டமிட்டு வகுப்பை நடத்த வேண்டும். ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அனுமதிக்கலாம்.
அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அனைவரும் முககவசத்துடன் பங்கேற்க வேண்டும். பள்ளி திறக்கும் முன் பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து, துாய்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
வகுப்பு நாளில் தினமும் வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறையினர் வழங்கும் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும், என கலெக்டர் உத்தரவிட்டார்.மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாநகர் நகர்நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/