பெருந்துறை ஆக 25:
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில் நிர்வாகிகள் பெருந்துறை வட்டாட்சியர் கார்த்தியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பெருந்துறையில் 2,700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு சாயம், சலவை, தோல், ராசயனம், இரும்பு, ரப்பர் என ஏராளமான தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் குறிப்பாக சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் விதிகளுக்கு புறம்பாக ஆலைகளில் நச்சுக்கழிவுகளை சுத்தரிக்காமல் வெளியேற்றி நிலத்திற்குள் விட்டுவந்ததால் சிப்காட் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுபட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிப்காட் சுற்றுவட்டார பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து பொதுநல அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்பின் கோரிக்கைபடி வட்டாட்சியர் தலைமையில் மாசுகட்டுப்பாடு வாரியம், சிப்காட், வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மக்களும் பங்கேற்கும் ஆய்வு கூட்டங்களை மாதந்தோறும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சட்டமன்ற தேர்தல், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதால் மாதாந்திர ஆய்வு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today