கடம்பூர் சூலை 15:
கடம்பூர் ஒன்றியத்தில் உள்ள குன்றி மலை கிராமத்தில் உள்ள மலை வாழ் மக்கள், அவர்களது குழந்தைகளிடம் மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் குறைகள் கேட்டு ஆய்வு செய்தார். குன்றி கிராமத்தில் உள்ள ஊராளி இன மக்கள், அவர்களது குழந்தைகளை சந்தித்து கல்வி மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் மருத்துவ சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு குறித்து கேட்டார். இம்மக்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு வழங்க அறிவுறுத்தி, நூல்கள் வழங்கி பேசியது,குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுப்பது அவசியம். அவ்வாறு தடுக்க தவறினால் அக்குழந்தைகளில் கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம், உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் கல்வி பயில போதுமான வசதிகள், வாய்ப்புகள் அரசால் ஏற்படுத்தி தரப்படும். ஊராளி இன மக்கள் குன்றி மற்றும் அதனை சுற்றி உள்ள பல குக்கிராமங்களில் வாழ்கின்றனர். இங்கு வசிக்கும் பழங்குடி மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக, இணையதள வாதி ஏற்படுத்தி தர அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு பேசினார்.கடம்பூர் இன்ஸ்பெக்டரிடம் இங்கு குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் உடன் நடவடிக்கை எடுத்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.இங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தொழில் பயிற்சியை மேலும் விரிவுபடுத்த, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் நல அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கர்ணன் காமராஜ், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today