ஈரோடு ஆக 12:

பூச்சி மருந்து கடைகள் நடத்துபவர்கள் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். வேளாண் இடுபொருட்களான விதைகள், பூச்சி மருந்துகள் மற்றும் உரங்கள் விநியோகம் செய்வதற்கான பட்டயப்படிப்பு அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான பட்டயபடிப்பு தொடக்க விழா ஈரோடு அடுத்துள்ள திண்டலில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி பேசியதாவது,வேளாண் இடுபொருட்களான விதைகள், பூச்சி மருந்துகள் மற்றும் உரங்கள் விநியோக செய்யும் விற்பனை நிலையங்கள் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. வேளாண் சாகுபடி விபரங்களையும் பூச்சி நோய் தாக்குதலையும் கண்டறிந்து அதற்கேற்ப இடுபொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக வேளாண் சார்ந்த பயிற்சியில் கல்வி தகுதி பெற்றிருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

எனவே உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்கள் இடுபொருள் விற்பனை மையம் துவக்கும் போது குறைந்த பட்சம் ஒரு வருடம் வேளாண்மை டிப்ளமோ பெற்ற சான்று இருக்க வேண்டும். இப்பயிற்சி ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். இந்தாண்டு மொத்தம் 40 பயிற்சியாளர்களுக்கு வேளாண் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறும் பங்கேற்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் முரளீதரன் வரவேற்புரை ஆற்றினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ஆசைத்தம்பி, பூச்சிமருந்து ஆய்வக வேளாண்மை துணை இயக்குனர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today