கோபி செப் 25:

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட கோபி, பவானி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை ஏற்றி செல்ல பயன்படுத்தும் வேன் மற்றும் பஸ்களின் ஆய்வு பணி, கோபி ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஹைடெக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி (கோபி), கதிர்வேல் (பவானி) ஆகியோர் ஆய்வுக்கு வந்திருந்த 120க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது வாகனத்தில் அவசரகால வழி கதவு சரியாக செயல்படுகிறதா? தீயணைப்பு கருவிகள் செயல்படுகிறதா? ஹேண்ட் பிரேக் செயல்பாட்டில் உள்ளதா? அரசின் விதிமுறைகளின் படி வண்ணம், படிக்கட்டு, மாணவர்களுக்கான பாதுகாப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

குறைபாடு உள்ள வாகனங்களுக்கு  நோட்டீசு கொடுத்து அதை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது குறித்து நிருபர்களிடம் பேசிய வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி, அரசின் உத்தரவுப்படி அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களிலும் சி.சி.டி.வி. கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். அவைகள் பள்ளிகளில் இருந்து கண்காணிக்கும் வகையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தவிர அரசின் வாகன விதிமுறைகளுக்கு உள்பட்டு பள்ளி வாகனங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்படுவதால், குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகளில் மாணவரிகளின் சேர்க்கை குறைவாக உள்ளதால், சில வாகனங்களின் பெர்மிட்டை திரும்ப ஒப்படைப்பதாக கூறி உள்ளனர், என்றார். முன்னதாக கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி, வாகனங்களை இயக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் கல்லூரியின் அறங்காவலர்கள் கவியரசு, ஜோதிலிங்கம், முருகசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/