ஈரோடு சூலை 31: ஈரோட்டில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 12,450 பேரின் கோரிக்கைகளை ஏற்று அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஏற்று, அவர்களுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரச நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். இதில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை,  மீன் வளத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 12,450 நபர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில் கூறியதாவது:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்கள்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 40,157 மனுக்களில், 12,450 மனுதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 3,636 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. மக்களுக்கு தேவையான குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக குடிசைகளில் வாழுகின்ற மக்களுக்கு நிரந்த குடியிருப்பினை ஏற்படுத்தி வரும் வகையில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., முருகேசன், தனித்துணை ஆட்சியர் குமரன், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், ஈரோடு ஆர்டிஓ பிரேமலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today