ஈரோடு செப் 22:
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் முனியப்பன் கோயில் அருகில் சாய ஆலைகளில் பிரிண்டிங் செய்யப்படும் துணிகளை கொண்டு வந்து சிலர் காவிரி ஆற்றில் தண்ணீரில் நேரடியாக அலசி வருவதாக புகார் வந்தது.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில இருந்தும் சாய துணிகள் இதற்காக சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு சாய துணிகளை காவிரியில் அலசி சிலர் அலசி சென்று வருகின்றனர். இதனால் நீரின் தன்மை கெட்டுப் போவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கருங்கல்பாளையம் முனியப்பன் கோயில் அருகில் காவிரி ஆற்றில் சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து சாயத்துணிகள் அலசி வருவதாக நேற்றிரவு ஈரோடு மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி பொறியாளர்கள் மற்றும் போலீசாருடன் சென்று காவிரி கரையோர பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கும்பல் காவிரி ஆற்றில் சாய துணிகளை நீரில் அலசிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகள் வருவதை கண்ட அந்த கும்பல் சாய துணிகளையும், சரக்கு வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது, வாகன பதிவு எண் எதுவும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன உரிமையாளர் யார், எந்த சாய ஆலையில் இருந்து சாயத்துணிகள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல வெட்டுக்காட்டு வலசு, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றதா என்பது குறித்து நேற்றிரவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/