ஈரோடு டிச 8:

தொடர் மழை காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளி சந்தையானது வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு தொடர் மழை மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான வியாபாரிகளே வந்திருந்தனர்.

இதே போல வெளி மாவட்டங்களில் இருந்தும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லரை வியாபாரம் மட்டும் 40 சதவீதம் வரை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது, மழையின் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.

இதே போல ஒமிக்ரான் பரவல் காரணமாக மாநில எல்லைப்பகுதியில் கெடுபிடிகள் செய்யப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம்  கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லறை வியாபாரம் மட்டும் 40 சதவீதம் வரை நடைபெற்றது. அடுத்த வாரத்தில் இருந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை சீசன் விற்பனை தொடங்க உள்ளது. இவ்வாறு கூறினர்.  https://www.wholesaletextile.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/