அம்மாபேட்டை ஆக 19:
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பவானி அடுத்துள்ள கேசரிமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை மற்றும் சான்று பெறுதல் தொடா்பான பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி தலைமை தாங்கினார். விதைச்சான்று அலுவலர் தமிழரசு பேசியதாவது, இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து தோட்டத்தில் இயற்கை முறையில் பண்ணையிலிருந்து பெறப்படும் இடுபொருட்களை மட்டுமே கொண்டு சாகுபடி செய்திட வேண்டும்.
தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தீவனத்தினை மட்டும் அளித்து கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தொழுஉரம், பஞ்சகாவியம், அமிர்தகரைசல், ஜீவாமிர்தம், மீன்அமிலம் மற்றும் பூச்சிவிரட்டி ஆகியவற்றை கொண்டு மட்டும் வேளாண்மை செய்திடும் பட்சத்தில் மகசூல் இழப்பு ஏதுமின்றி நல்ல தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்து லாபம் பெற இயலும். இயற்கை முறை விவசாயம் செய்யும் விவசாயிகள் சான்று பெற தனியாகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு பேசினார். பயிற்சி முகாமில் அங்கக பண்ணை மேலாளர் ஞானபிரகாசம், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா்கள், உதவி மேலாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today