ஈரோடு சூலை 29:
பி.எஸ்.என்.எல், நிறுவனம் 4ஜி சேவையை உடனடியாக துவங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் இணைந்து ஈரோட்டில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல், பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பழனிவேலு தலைமை தாங்கினார். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் மணியன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து கோரிக்கைகள் தொடர்பாக விளக்கி பேசினார்.இதில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை உடனடியாக துவங்க வேண்டும். 5ஜி சேவைகளை துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2021 ஜூன் மாத ஊதியத்தை வழங்க வேண்டும். மாத ஊதியத்தை அந்த மாதத்தின் கடைசி நாளிலேயே வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு டி.ஓ.டி., வழங்க வேண்டிய ரூ.39 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஆப்டிக் பைபர் மற்றும் டவர்களை பணமாக்க ஒன்றிய அரசு முயற்சிக்க கூடாது. காலியாக உள்ள நிலங்களை பணம் ஆக்குவதன் மூலம் பி.எஸ்.என்.எல், கடன்களைத் திருப்பிக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். க்ளஸ்டர் முறையிலான அவுட்சோர்சிங் முறையை முழுமையாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். 3வது ஊதிய மாற்றம், ஓய்வூதியம் மாற்றம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வு கால பலன்கள் ஆகியவற்றை உடனடியாக தீர்வு காண வேண்டும். டிரான்ஸ்மிஷன் நெட்வோர்க்கினை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பாலு, சரவணமூர்த்தி, நாகலட்சுமி, சதாசிவம் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today