ஈரோடு ஆக 14:
ஈரோடு வ.உ.சி., பார்க் வளாகத்தில் 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மாநகராட்சி ராட்சத குடிநீர் டேங்க் உள்ளது. இங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
சில தினங்களுக்கு முன் வ.உ.சி., பார்க் ரோட்டில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து இதனால் 24-வது வார்டு முதல் 30-வது வார்டு வரை, 41-வது வார்டு முதல் 44- வது வார்டு வரை 11 வார்டுகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
மாநகராட்சி சார்பில் தண்ணீர் இல்லாமல் தவித்த 11 வார்டு மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் பணி இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 11 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today