ஈரோடு டிச 17:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.

இதன்படி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் இன்று பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த 300-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதில் பணியாற்றும் 2,600க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மேலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வங்கி ஊழியர்கள், மேலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் வங்கிகளின் சேவை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. வங்கிகளின் நுழைவாயிலில் வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு இடம் பெற்று இருந்தது. அதேநேரம் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதுகுறித்து ஈரோடு வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் நரசிம்மன் கூறியதாவது:

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளை சேர்ந்த 2 ஆயிரத்து 600 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நாள் ஒன்றுக்கு நடக்கும் ரூ.600 கோடி பணவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கி காசோலை பரிவர்த்தனை போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றே அனைத்து ஏ.டி.எம். மையங்களில் தேவையான பணம் நிரப்பப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  https://www.financialservices.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today