ஈரோடு டிச.27:

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க  தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வந்தார். அப்போது நீதிபதி ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோட்டில் வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் 5 ஆயிரம் டன் குப்பைகள் குவிந்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த குப்பைகளை ரூ. 300 கோடி மதிப்பில் பயோமெட்ரிக் முறையில் தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது 4 ஆயிரம் மெட்ரிக் டன் வரை குப்பைகள் தரம் பிரிக்கப் பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு பணி நிறைவடைந்து விடும். ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத மக்கள் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்கின்றனர். ஆனால் சென்னையில் 21 சதவீதம், கோவையில் 30 சதவீதம், மதுரையில் 40 சதவீதம் குப்பைகள் மக்கள் தரம் பிரித்து கொடுக்கிறார்கள்.

இதனால் சென்னையில் உள்ள வட சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான குப்பைகள் சேர்ந்து வருகிறது. குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து  கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து சரியான முறையில் பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு அதிக அளவு உரங்கள் கிடைக்கும்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைக்க வழிவகுக்கும். நீர்நிலைகளை முறையாக தூர்வாரினால்  நீரோட்டம் நன்றாக இருக்கும். தூர்வாராமல் இருந்தால் குப்பைகள் சேர்ந்து விஷ தன்மையாக மாறி தீங்கு விளைவிக்கும். எனவே அனைத்து நீர் நிலைகள் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம் பவானி உள்பட தமிழகத்தில் இரண்டு இடங்களில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பின்னரே அந்த தண்ணீரை விவசாய பயன்பாடு அல்லது நீர் நிலைகள் பயன்பாட்டிற்கு வெளியேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். https://www.greentribunal.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today