ஈரோடு ஆக 2:

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட் ஜவுளி சந்தை, அதனை சுற்றி உள்ள டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை போன்ற பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், மொத்த விற்பனை கடைகள், சாலை ஓர ஜவுளி விற்பனை நடக்கும். தற்போது ஆடி தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.

கொரோனாவால் கடந்த மாதங்களில், 60 நாட்களுக்கு மேல் இங்கு விற்பனை நடக்காமல் கடைகள் மூடப்பட்டன. பல்வேறு மாவட்டம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உட்பட பல மாநில வியாபாரிகளும் ஜவுளிகளை வாங்கி செல்லாமல் இருந்தனர். தற்போது ஆடி தள்ளுபடி விற்பனை நடப்பதால், நேற்று ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் மொத்த மற்றும் சில்லறை விலையில் ஜவுளிகளை வாங்கி சென்றனர்.

குளிர்கால ஆடைகள், புடவை, வேட்டி, துண்டு, பெட்ஷீட், பனியன், ஜட்டி, உள்ளாடைகள், கர்டன், பெட்ஸ்பிரட், தலையணை உரை, காட்டன் துணிகள், நைட்டி, சிறுவர், சிறுமியர்கள் வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு ஆயத்த ஆடைகள், டிஷர்ட், டிரவுசர் என பல்வேறு வகையான ஆடைகள், மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை நடந்தது. நேற்று, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இவற்றை வாங்கி சென்றனர். இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே நிலை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today