ஈரோடு டிச 23:

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவு தவறானது.

பெண்களின் திருமண வயதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு. இது பெண்களுக்கு எதிரான சட்டத்திருத்தம், அதிக பாலியல் சீர்கேடுகளுக்கு இது வழிவகுக்கும். நாட்டின் கலாச்சார பெருமைக்கு ஊறுவிளைவிக்கும். ஒன்றிய அரசு இதனை திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது.

மிளிர்ந்து நிற்கும் செயல் திட்டங்கள் தேசத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளையும் நாட்டின் மிகச்சிறந்த முன்னோடியாக கொண்டு வருவதற்கான சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். வக்பு வாரியம் வெளிப்படைத்தன்மையுடன் பாரபட்சம் இல்லாமல் அரசியல் குறுக்கீடு இன்றி செயல்படுவதற்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பாதுகாப்பு துறை ரெயில்வே ஆகியவற்றுக்கு அடுத்ததாக வக்பு வாரியத்திற்கு அதிக சொத்துக்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஏராளமான வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதனை கணக்கெடுத்து மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றோம்.

அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் வக்பு வாரிய சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை கடந்த 6 மாத காலத்தில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் சட்டரீதியாக நீண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் சொத்துகளை மீட்பதில் தாமதம் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார். https://www.bcmbcmw.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today