ஈரோடு சூலை 08:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்தபோது தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கை எடுத்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முழு நேர கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியது. பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டனர். போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன் இணைப்பு இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.

இதை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த மே 18ம் தேதி 69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டிடம் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டுமான பணி தொடங்கியது. ஜூலை 1ம் தேதி, 45வது நாளில் பணி முடிக்கப்பட்டது. அதிநவீன பிரீ காஸ்ட் ஸ்லாப்ஸ் மூலமாக மருத்துவமனை கட்டியதற்கும், அதிக எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் அமைத்ததற்கும் உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசிய கண்ட அளவிலே ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் சேர்ந்தவர்களும் சாதனை விருதுகளை வழங்கிய நிறுவனத்தினரும் கலந்து கொண்டனர். இதுபற்றி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சகாதேவன் கூறுகையில், கொரானா மூன்றாம் அலை வரும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அவ்வாறு வரும் பொழுது இந்த மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக முழுவதும் பயன்படுத்தப்படும். கொரோனா தொற்று முழுவதும் அழிந்த உடன் இம்மருத்துவமனை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனக் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today