மொடக்குறிச்சி ஆக 20:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா,44. இவர், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்., 5ம் தேதி டில்லியில் நடக்க உள்ள விழாவில் ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற உள்ளார். இதுபற்றி ஆசிரியை லலிதா கூறியதாவது: புதிய கற்பித்தல் முறை, மாணவியர் சேர்க்கை, பள்ளி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சமூக மேம்பாட்டில் மாணவியரின் பங்களிப்பு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவைகளை தொடர்ந்து செயல்படுத்தினேன்.

மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளிக்கும், இப்பள்ளியில் படித்த குழந்தைகளுக்கும் பெருமை சேர்த்தது. கடந்த மூன்றாண்டுகளில் பணியின் தன்மை குறித்து ஆராயப்பட்டது. ஆசிரியையாக, 19 ஆண்டுகளும், ஒன்றரை ஆண்டாக தலைமை ஆசிரியராக பணி செய்கிறேன். மாநில அரசின் விருது ஏதும் கிடைக்கவில்லை.

கடந்தாண்டு தேசிய விருதுக்கு விண்ணப்பித்து, இறுதி சுற்று வரை சென்றேன். இந்தாண்டு கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. எனது கணவர் டாக்டர் காமராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தனியார் கலை கல்லுாரியில் வணிகவியல் துறை பேராசிரியராகவும், மூத்த மகள் சக்தி பிரியங்கா பிளஸ் 1ம், மகன் அபிநந்தன் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர். இவ்வாறு கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today