ஈரோடு டிச 2:

ஈரோடு மாநகரில் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் வசிப்பவர்களுக்கு மாற்று இடத்தில் விரைவில் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி உறுதி அளித்தார். ஈரோடு மாநகராட்சி 4ம் மண்டலத்திற்கு உட்பட்ட மோசிக்கீரனார் வீதியில் நகரின் அனைத்து கழிவு நீரும், அப்பகுதியில் உள்ள சாக்கடை வழியாக வெளியேறி வருகிறது.

இதனால், மழை பெய்யும் போது அதிகளவிலான மழை நீர் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து அப்பகுதியில் அடைத்து கொள்வது தொடர் கதையாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அறிந்த தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மோசிக்கீரனார் வீதி காலிங்கராயன் வாய்க்காலினையொட்டி செல்லும் கழிவு நீர் சாக்கடையினை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடையை விரிவுப்படுத்தி, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படாத வகையில் விரைவாக பணியினை தொடர மாநகராட்சி கமிஷனர் சிவகுமாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மாநகர செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் செந்தில்குமார், தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட பொருளாளர் பழனிசாமி, கேபிள் செந்தில்குமார், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் விஜயகுமார், சண்முக வடிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மோசிக்கீரனார் வீதி, மாதவகிருஷ்ண வீதி, லட்சுமி நாராயணன் வீதி மக்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மக்களிடம் அமைச்சர் பேசுகையில், கூறியதாவது: இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடைகள் விரிவுப்படுத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரில் உள்ள அனைத்து சாக்கடைகளும் உடனடியாக தூர் எடுக்கப்பட்டு, இந்த பகுதியில் கழிவு நீர் தேங்காமல் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

வாய்க்கால் கரையோரம் உள்ள மக்களுக்கு இந்த பகுதியிலேயே பட்டா வழங்கலாம், ஆனால், நீதிமன்றம் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதனால், வாய்க்கால் கரையோரம் வசிப்பவர்களுக்கு விரைவில் மாற்று இடத்தில் பட்டாவுடன் கூடிய இடம் வழங்கப்படும். இப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகள் செய்யப்படும்.

வாய்க்காலில் சமூக விரோத செயல்களை தடுக்க உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். காலிங்கராயன் வாய்க்கால் கரைக்கு மக்கள் சுலபமாக சென்று வர படிகட்டுக்கள் அமைத்து தரப்படும். மக்களாகிய நீங்கள் கழிவு நீர் சாக்கடைகளில் தலையனை, குப்பைகள் போன்றவற்றை போடுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். https://www.tnhb.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/