ஈரோடு நவ 1:
தமிழ்நாடு வீட்டுவசதித்துறையின் சார்பில் ஈரோடு முத்தம்பாளையம், நசியனூர் ரோடு, பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு மற்றும் வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தொடங்கப்பட்ட முத்தப்பாளையம் வீட்டு வசதி திட்டங்கள் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட திட்டங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சம்பத் நகர் கொங்கு மகாலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீட்டுவசதித்துறை சேலம் சரக மேற்பார்வை பொறியாளர் கே.டி.சாந்தி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலால் உதவி ஆணையாளர் பா.ஜெயராணி, நாமக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையாளர் ஜெ.தேவிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கரிகாலன் ஒதுக்கீடுதாரர்கள் தேர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். வீட்டு மனைகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் என மொத்தம் 537 இடங்களுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இதில் குலுக்கல் மூலம் மொத்தம் 350 பேர் ஒதுக்கீடு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வீட்டு வசதி பிரிவு கண்காணிப்பாளர் பிரபாவதி, உதவி வருவாய் அதிகாரி (பொறுப்பு) ஜெ.பிரியா, உதவி பொறியாளர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். https://www.tnhb.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/