ஈரோடுசூலை 08 :
பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி, வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏ.ஐ.டி.யு.சி, மாநில செயலாளர் சின்னசாமி அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறையில் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பெருந்துறை நகரம் உள்ளாட்சி நிர்வாக ரீதியாக பேரூராட்சியாக உள்ளது. அருகிலேயே கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி உள்ளது. பெருந்துறை பேரூராட்சியில் சுமார் 35 ஆயிரம் பேரும், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரம் பேரும் என 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட, வெளி மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் இங்கு வசித்து வருகின்றனர். வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், பேருந்து நிலையம், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மின் மயானம், மருத்துவமனைகள் போன்ற அனைத்தையும் இரு பேரூராட்சி மக்களும் பொதுவாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
தனித்தனி நிர்வாகமாக இருப்பதால் நகரில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எனவே இரு பேரூராட்சிகளையும் இணைத்து பெருந்துறையை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி, சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக ஏற்கனவே 2 பேரூராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே