ஈரோடு சூலை 17:

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் சி.சுந்தரம், மாவட்டப் பொருளாளர் எம்.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர்கள் கே.அர்ச்சுனன், மா.நாகப்பன் மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.ராஜ்குமார், கே.எம்.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு நியமிக்கப்பட்ட அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் கடந்த ஆட்சியில் இவ்வாரியம் திருத்தியமைக்கப்படாமல் இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த குறுகிய காலத்தில் இவ்வாரியம் திருத்தி அமைக்கப்பட்டதை வரவேற்பது. வாரியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பொன்.குமாருக்கும், வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் கே.ரவி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பது. கொரோனா தொற்றுக்கான ஊரடங்கால் கடந்த மார்ச் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகச் செயல்பாடும் முடங்கியது. கடந்த 2020 ஜூன் 19 முதல் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் சமர்பித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்தும் இணைய வழியில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன் லைன் மூலமான நலவாரிய செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். அதுவரை நேரடி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெற நடவடிக்கை வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் 33 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், 13 லட்சம் பேர் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளனர். நலவாரியத்தில் பதிவு செய்து உயிருடன் உள்ள 60 வயதுக்கு குறைவான அனைவரையும் நலவாரியத்தில் உறுப்பினராக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதியிருந்தும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகள் மிகச் சொற்பமாக உள்ளன. பல நலத்திட்ட உதவித் தொகைகள் பத்தாண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ளது. ஆகவே, குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவித் தொகைகளை செலவினங்களுக்கேற்ப உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய நோக்கங்களை செயல்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பி.எப்., ஈ.எஸ்.ஐ., திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 8ல் ஈரோட்டில் கட்டுமானத் தொழிலாளர்களின் மாவட்ட கோரிக்கை மாநாட்டை நடத்துவது என முடிவு செய்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today