ஈரோடு டிச 30:

மண்புழு உர உற்பத்திக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்திட விவசாயிகளுக்கு வேளாண் வல்லுனர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் சரவணகுமார் கூறியதாவது:

மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் புழுக்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மண் புழுக்களின் செயல்பாடு மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மண்ணின் வளத்தை அதிகரிக்க அங்கக அல்லது பண்ணைக் கழிவுகளை மண் புழுக்களை கொண்டு மக்க வைத்து மண்ணில் இடுவது அவசியமாகும்.

மக்கும் கழிவுகளான பண்ணைக் கழிவுகள், காய்கறி கழிவுகள், இழை சருகுகள், கால்நடை கழிவுகள் போன்ற கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். கழிவுகளை நேரடியாக அப்படியே பயன்படுத்தாமல் சூரிய வெளிச்சத்தில் உலர்த்தி, சாணக்கழிவுகளுடன் கலந்து 15 முதல் 20 நாட்கள் நன்கு மக்க வைத்து பின்னரே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பாதியளவு மக்கிய குப்பைகளையே மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். மண் புழு உரம் தயாரிக்க போதுமான அளவு நிழல் இருத்தல் அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அரை அடி ஆழத்திற்கு தேங்காய் உரி மட்டைகளை அடுக்கி, அதன் மேல் காய்ந்த இழை, சருகுகளை வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்கு மேல் பாதியளவு மக்கிய பண்ணைக் கழிவுகளை கொண்டு நிரப்புதல் வேண்டும்.

பின்னர், அதனை சுற்றி வலைகள் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மண் புழுக்களை கழிவுகள் மீது விட வேண்டும். தோராயமாக 1 டன் அளவுள்ள கழிவுகளை மக்க வைக்க 2 கிலோ மண் புழுக்கள் தேவைப்படும். மண் புழுக்கள் வெளியிடப்பட்ட பிறகு படுக்கையின் ஈரப்பதம் 40 முதல் 60 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

ஈரப்பதத்தை தக்க வைக்க சணல் சாக்கு பைகளை கொண்டு மூடி விட வேண்டும். முதல் அறுவடை 55 முதல் 60 நாட்களில் தயராகி விடும். அறுவடைக்கு முன் நீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். முதிர்ந்த மண் புழு உரங்களை கையால் குவித்து, நிழலில் உலர்த்த வேண்டும். மண்புழு உரத்தின் சத்துக்களை அதிகப்படுத்த அறுவடை செய்த உரங்களுடன் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டிரியா போன்றவற்றை கலந்து உபயோகிக்கலாம்.

இவ்வாறு உற்பத்தி செய்த மண்புழு உரங்களை ஏக்கருக்கு 2 டன் அளவில் பயன்படுத்தலாம். மண்புழு உர உற்பத்தி குறித்து திறன் வளர்ப்பு பயிற்சிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சரவணகுமார் கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today