ஈரோடு நவ 10:

வடகிழக்கு பருவமழையால் கால்நடைகள் நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க விவசாயிகள் கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிக்க ஈரோடு வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஈரோடு மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் கால்நடை மருத்துவ வல்லுநர் முனைவர் திருமலைச்சாமி கூறியதாவது: விவசாயத்தின் ஓர் அங்கமாக கால்நடை வளர்ப்பு அமைந்துள்ளது.

கால்நடைகள் நல்ல முறையில் வளர அவற்றை சீரற்ற கால நிலையிலிருந்து பாதுகாப்பது ஒவ்வொரு விவசாயிகளின் கடமையாகும். சீரற்ற காலநிலை மாறுபாட்டால் கால்நடைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவற்றின் உற்பத்தித்திறன் குறைகிறது. கால்நடை கொட்டகையில் கசிவு இருந்தால் தரையின் ஈரப்பதம் அதிகரித்து மண்ணில் அம்மோனியாவின் செறிவு அதிகமாகி, கால்நடைகளுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறு மற்றும் கால்நடைகளின் கால் குளம்புகள் மிருதுவாகி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கொட்டகையின் மேற்பகுதியில் ஏற்படும் நீர்க்கசிவுகளை சீரமைத்து தரைப்பகுதியினை வறண்ட நிலையில் வைத்திருக்க வேண்டும். மழையினால் கால்நடைகளில் ஈக்கள், கொசுக்கள், தெள்ளுப்பூச்சிகள் மற்றும் உண்ணிகளின் தாக்கம் அதிகமாகும். இதனால் கால்நடைகள் ஓய்வின்றி இருப்பதால், கால்நடைகளுக்கு முடி உதிர்தல், ரத்த சோகை ஏற்பட்டு உண்ணிக்காய்ச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக ஒட்டுண்ணி தாக்கத்தால் கால்நடைகள் சில நேரங்களில் இறக்க நேரிடலாம்.

எனவே, கொட்டகையில் நீர் தேங்காமல் இருப்பது அவசியம். ஈக்கள், கொசுக்களை கட்டுப்படுத்த சைஃபர்மெத்ரின் மருந்தை 2 மில்லி அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் (தீவனக் கிடங்குகள் மற்றும் பசுந்தீவனங்கள் மேல் தெளிப்பதை தவிர்க்கவும். கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி ஊசி மூலம் மருந்து செலுத்தி உண்ணிகளை கட்டுப்படுத்தலாம். கால்நடைகளுக்கு சீரான இடைவெளியில் குடற்புழு நீக்கம் கட்டாயம் செய்ய வேண்டும்.

மழைக்காலங்களில் பசும்புற்கள் மற்றும் தீவனப்பயிர்களின் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் கால்நடைகளில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அதன் உற்பத்தி திறன் பாதிக்கப்படும். பசும்புற்கள் தீவனப்பயிர்களை உலர வைத்தபின் அல்லது உலர் தீவனத்துடன் கலந்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். பூஞ்சை தொற்று ஏற்பட்ட அடர் தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்.

அதிக ஈரப்பதத்தின் மூலம் நோய் தாக்கும் நுண்ணுயிரிகளின் (பாக்டீரியா) உற்பத்தி அதிகரித்து கால்நடைகளுக்கு மடிநோய் தாக்க வாய்ப்புள்ளது. இதனால் பால் உற்பத்தி குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் நுண்ணுயிர்க்கொல்லியினை உபயோகித்து மடிநோயினை குணப்படுத்தலாம்.

கிருமி நாசினியினை (பொட்டாசியம் பெர்மாங்கனேட் 1 சதவிகிதம்) தண்ணீரில் கலந்து தொடர்ந்து மடியினை சுத்தம் செய்யதால், தொற்றுக்கள் பரவுவதை தடுக்கலாம். இந்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் கடைபிடித்து வடகிழக்கு பருவமழையில் இருந்து தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு திருமலைச்சாமி கூறினார்.  https://www.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/