ஈரோடு நவ 29:

வணிகரீதியில் சிப்பிக்காளான் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட அறிவியல் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும் என வேளாண் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் சரவணகுமார் கூறியதாவது: புரதச்சத்து மிகுந்த பூஞ்சான வகையை சார்ந்த பச்சையம் இல்லாத தாவரமே காளான் ஆகும்.

அசைவ உணவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக கருதப்படும் காளானின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காளான் வளர்ப்பு, சமீபகாலமாக பெருகி வருகிறது. அவற்றுள் சிப்பிக் காளான் வளர்ப்பானது எளிதில் கடை பிடிக்கக் கூடிய ஒன்றாகும். சிப்பிக்காளான் வளர்ப்பிற்கு தென்னங்கீற்று குடில்கள், தரமான தாய்வித்து மற்றும் வைக்கோல்கள் போன்றவை மிக முக்கியமான மூலப்பொருள்கள் ஆகும்.

வணிகரீதியில் காளான் உற்பத்தி மேற்கொள்ள சில அறிவியல் ரீதியான தொழில் நுட்பங்களை கடைபிடித்தல் சிறந்த பலனளிக்கும். நாம் உற்பத்தி செய்ய நினைக்கும் காளானின் தேவையை பொருத்து காளான் குடிலின் அளவினை மாற்றி அமைக்கவேண்டும். அதேபோல் காளான் வித்து பரவும் அறை மற்றும் காளான் உற்பத்தி அறை என தனித்தனியாக இருப்பது சிறந்த மகசூலை பெற உதவும். சிப்பிக்காளான்கள் உற்பத்தி செய்ய நெல்வைக்கோலை பயன்பத்தும் முன் அதனைபதப்படுத்துதல் மிகவும் அவசியமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வைக்கோலை 5 செ.மீ.  நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, அதனை 4 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, வைக்கோலில் நோய் தொற்று கிருமிகளை நீக்க 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைக்கவேண்டும். இதைத்தொடாந்து வைக்கோல் துண்டுகளை ஒரு காற்றோட்டமான அறையில் பரப்பி 65 சதவீதம் ஈரப்பதம் இருக்கும்படி உலர்த்த வேண்டும். 65 சதவீதம் என்பது வைக்கோல் ஈரப்பதமாகவும், அதேசமயம் கையில் எடுத்து பிழிந்தால் தண்ணீர் வடியாததாகவும் இருக்க வேண்டும்.

காளான் ஒரு உணவுப்பொருள் என்பதால் ரசாயனங்களை கொண்டு வைக்கோலை தொற்று நீக்கம் செய்யக்கூடாது. ஒரு காளான் படுக்கை தயார் செய்ய சுமார் அரை கிலோ வைக்கோல் தேவைப்படும். ஒரு காளான் விதைப்புட்டியில் இருந்து இரண்டு காளான் படுக்கைகள் தயார் செய்யலாம். 60X30 செ.மீ அளவுள்ள பைகளில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை 10 செ.மீ. உயரத்திற்கு நிரப்ப வேண்டும். பின்னர் அதன் மேல் காளான் வித்துக்களை தூவி விட வேண்டும்.

மீண்டும் 10 செ.மீ. உயரத்திற்கு வைக்கோலை அடுக்கி காளான் விதைகளை தூவி விட வேண்டும்.விதைகளை பரப்பும்போது பைகளின் ஓரங்களின் அதிகளவில் இருக்குமாறு பரப்ப வேண்டும். பின்னர் பைகளின் வாய்ப்பகுதியை சணல் கொண்டு கட்டி விடுதல் வேண்டும். தயார் செய்த காளான் படுக்கைகளை கொட்டகைக்குள் வைக்க வேண்டும். கொட்டகையின் வெப்பநிலை 25- – 29 டிகிரி செல்சியஸ் இருக்குமாறும், ஈரப்பதம் 85 சதவீதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

காளான் படுக்கையில் அதன் பூஞ்சானங்கள் பரவிய மூன்று நாட்களில் மொட்டுகள் உருவாக ஆரம்பிக்கும். மிதமான வெளிச்சமும், காற்றோட்டமும் இருப்பது காளான் உற்பத்தியை துரிதப்படுத்த உதவும். 20 – -22 நாட்களில் காளான் மொட்டுகள் உற்பத்தியாகி பின்னர் முழு வளர்ச்சி அடையும். முழு வளர்ச்சி அடைந்த காளானை அறுவடை  செய்யலாம். பின்னர் 7 முதல் 10 நாட்கள் இடையில் இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்யலாம். இந்த காளான்களை துளையிடப்பட்ட பைகளில் வைத்து விற்பனை செய்யலாம். இவ்வாறு சரவணகுமார் கூறினார். https://www.tnagrisne.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/