ஈரோடு நவ 10:

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

அதன்படி, மாவட்டத்தில் நிகர வாக்காளர்கள் 19 லட்சத்து 66 ஆயிரத்து 827 பேர் உள்ளனர். இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் பணிகளை புறக்கணிப்பதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க, ஈரோடு வட்ட கிளை அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அரசு அறிவித்த தேர்வு செலவினங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. அதேபோல்  தேர்தல் மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நிதித் துறை அமைச்சரிடம்  முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சட்டமன்றத் தேர்தல் செலவினங்களை முழுமையாக வழங்கவும், தேர்தல் மதிப்பு ஊதியத்தை உடனே வழங்கவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்தவும் வலியுறுத்தி, வருகிற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முகாம் நடைபெறும் நாட்களான 13, 14, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். https://www.eci.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/