ஈரோடு சூலை 17:

கால்நடைகளை துன்புறுத்தினால் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், விலங்குகளிடம் மனிதநேயத்துடன் பழகும் நோக்கத்துடன் செயல்படவும் கலெக்டர் தலைமையில் ஈரோடு பிராணிகள் துயர் தடுப்பு சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து கால்நடைகளை பாதுகாத்திட தேவையான சிகிச்சைகள், மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடைகளை துன்புறுத்தினால் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் மற்றும் இதர தேவைகளுக்காக கால்நடை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மாடு, குதிரை இழுக்கும் வண்டியில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. கால்நடைகளை வாகனங்களில் எடுத்து செல்லும் போது போதிய இடவசதிகளுடன், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் அலையவிட கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கால்நடைகளுக்கு முறையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து துன்புறுத்தினால் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today