ஈரோடு சூலை 28:
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன் கருதி இதுவரை சொத்துவரி விதிப்பு செய்யப்படாத கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் ஆகியவைகளுக்கு மாதம்தோறும் 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட பொதுமக்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களை நேரில் சந்தித்து விண்ணப்பங்கள் கொடுக்கலாம். ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் உதவி ஆணையாளர்களை மாதம் தோறும் 10-ம் தேதி வரி விதிப்பு மனுக்கள் கொடுக்க நேரில் சந்திக்கலாம். சொத்து வரி விதிப்பு செய்ய விண்ணப்பம் செய்பவர்கள் சொத்துவரி விண்ணப்ப படிவத்துடன் சொத்துக்கான ஆவண நகல் (நோட்டரி பப்ளிக் சான்று செய்யப்பட்ட நகல்), காலியிட வரி ரசீது நகல், பாதாள சாக்கடை வைப்புத்தொகை ரசீது நகல் ஆகியவை வழங்க வேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பத்துடன், சொத்து ஆவண நகல் (நோட்டரி பப்ளிக் சான்று செய்யப்பட்ட நகல்), பெயர் மாற்றம் செய்ய கோருபவருக்கு சொத்து பாத்தியத்தை தொடர்பான இதர ஆவணங்கள், 2021-–2022ம் ஆண்டு சொத்து வரி, குடிநீர் வரி செலுத்திய ரசீது நகல், பாதாள சாக்கடை வைப்புத்தொகை செலுத்திய நகல் ஆகியவை வழங்க வேண்டும். மாதத்தில் 10-ம் தேதி விடுமுறை நாளில் வந்தால் அதற்கு அடுத்த வேலை நாளில் விண்ணப்பங்கள் வழங்கலாம். இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறி உள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today