ஈரோடு சூலை 10:

களைக்கொல்லிக்கு எதிர்ப்பு சக்தி உள்ள மரபணு மாற்ற பருத்தி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் எஸ்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பருத்தி சாகுபடியில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி., எனப்படும் காய்ப்புழுவிற்கு எதிர்ப்பு சக்தி உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளே பெரும்பான்மையான பருத்தி விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசால் அங்கீகரிக்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி உள்ள மரபணு மாற்ற பருத்தி விதைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அரசின் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மற்றும் ஒப்புதல் பெறப்படாத விதைகளை கொண்டு சாகுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் சூழல் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்கள் சாதாரண ரக பருத்தி விதைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி., பருத்தி விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். களைக்கொல்லிக்கு எதிர்ப்பு சக்தி உள்ள மரபணு மாற்ற பருத்தி விதைகளை விற்பனை செய்வதும், சாகுபடி செய்வதும் சட்ட விரோதமாகும். இவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது இன்றியமையாத பொருட்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சிறை தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today