ஈரோடு நவ 15:

சென்னிமலை பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் சட்ட விரோதமாக செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செய்தித்துறை அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. சென்னிமலையில், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, பெருந்துறை வட்டம், சென்னிமலை ஒன்றியம்,  எக்கட்டாம்பாளையம் ஊராட்சி சில்லாங்காட்டு வலசு, வெப்பிலி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் விதிமுறைகளை மீறியும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்த விதிகளை பின்பற்றாமலும், சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

சட்ட விரோத கல் குவாரிகளுக்கு அருகில் 250 மீட்டர் தொலைவில் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ளன. ஊரின் அருகிலேயே வெடிமருந்து கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வெடிமருந்து பயன்படுத்துவதால் வெடி வெடித்தவுடன் ஊர் முழுவதும் நச்சு புகை மண்டலமாக மாறிவிடுகின்றது. பகல் நேரங்களில் வெடி வைப்பதற்கு பதிலாக இரவு நேரத்திலும் வெடி வைக்கப்படுகின்றது. எனவே விதிமுறைகளுக்கு மாறாக இயங்கி வரும் கல் குவாரிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.. https://www.usgs.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/