ஈரோடு டிச 23:
பர்கூர் மலைக்குட்பட்ட கூத்தம்பாளையத்தில் 8ம் நூற்றாண்டில் வணிக தொடர்புகளை உறுதிபடுத்தும் வகையிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பர்கூர் வனப்பகுதி கூத்தம்பாளையம், நெல்லூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில்,8ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
யாக்கை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சித்தலிங்கன், சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி ஆகியோர் நெல்லூர், கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது இக்கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக் கிராமங்களில் பல அரிய தொல்லியல் சின்னங்கள் பரவி கிடக்கின்றன.
பர்கூர், கடம்பூர், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஈமச்சின்னங்கள், பாறை ஓவியங்கள், தொன்மைத் தமிழ் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள 8ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், “சாத்தன்” என்ற வணிகத்தோடு தொடர்புடைய பெயரும் வந்துள்ளது.
பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இதுவரையில் 4 கல்வெட்டுகள் முந்தைய வட்டெழுத்து பொறிப்புடன் வெளிவந்துள்ளன. தரைப்பகுதிகளில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளுக்கு நிகரான அளவில் மலைப்பகுதியிலும் கல்வெட்டு சான்றுகள் கிடைப்பது கவனிக்க வேண்டியவை. தற்போது கிடைத்துள்ள நடுகல் 86 செமீ உயரமும், 75 செமீ அகலமும் கொண்டதாக உள்ளது.
அக்கல்வெட்டின் எழுத்துக்கள் முழுமையாக படித்தறிய கூடிய வகையில் இல்லை. எனினும் சில வார்த்தைகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய அளவில் உள்ளன. நடுகல் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகாமையில் உள்ள வனப்பகுதியில் ஆங்காங்கே நடுகற்கள் பரவிக் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் 12ம் நூற்றாண்டிற்கு பிற்பட்டவையாக காணப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தின் வனப்பகுதிகளாக இன்று நாம் அறியப்படும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து கிடைத்து வரும் தொல்லியல் தடயங்கள் அனைத்தும் காலங்காலமாக மக்கள் புழக்கத்தில் இந்த பகுதிகள் இருந்துள்ளதை காட்டுகின்றன. மேலும் பர்கூர், தாமரைகரை, ஈரெட்டி மலை வழியாக இன்று நடைமுறையில் இருக்கும் வழிப்பாதையில் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முக்கிய வணிக போக்குவரத்து தொடங்கி நடைபெற்றுள்ளது என்பதை இக்கல் வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. இவ்வாறு கூறினர். https://www.forests.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today