ஈரோடு டிச 8:

ஈரோடு மாநகரில் உள்ள மக்களில் 82.71 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 3ம் அலையை தடுக்கும் வகையில் தமிழக அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 13 கட்ட சிறப்பு தடுப்பூசிமுகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்த தகுதியான நபர்களாக 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 503 பேர் உள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் மட்டும் முதல் தவணை தடுப்பூசியினை 82.71 சதவீதம் பேர், அதாவது 3 லட்சத்து 20 ஆயிரத்து 522 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியினை 53.67 சதவீதம் பேர், அதாவது 2 லட்சத்து 7 ஆயிரத்து 971 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாமினை நடத்தி வருகிறோம். ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தி உள்ளோம். ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால், ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருள் வாங்க வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் தற்போது ஏராளமான மக்கள், முதியவர்கள் தாமாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnurbantree.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/