ஈரோடு நவ 8:

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.) முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.இவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றார். அப்போது ஈரோடு செங்கோடம்பாளையம் டெலிகாம் சிட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கும் வந்தார்.

அப்போது நிருபரிடம் பேசிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-இந்திய விண்வெளி ஆராய்ச்சி புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தையொட்டி 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு இந்தியா 2 மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்து இருந்தது. ஆனால் கொரோனாவின் கடுமையான தாக்கம் காரணமாக அந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இந்திய சுத்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பாக செய்ய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்திய பிரதமர் மோடி ஜ.நா.சபையில் அறிவித்தபடி இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தற்போது கையில் எடுத்து இருக்கிறோம்.இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-, மாணவிகள் குழுவினர் செயற்கைகோள்களை கண்டுபிடித்து உள்ளனர்.

இதுவரை 80 மாணவர் குழுவினர் 80 செயற்கை கோள்களை தயாரித்து இருக்கிறார்கள். இதில் 75 சிறந்த செயற்கை கோள்கள் 75-வது சுதந்திர தினத்தையொட்டி விண்ணில் அனுப்பப்படும்.நேனோ செயற்கை கோள்களும் இதில் உள்ளன. பருவ நிலை மாற்றம், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு, தொலை உணர்வு, விவசாயம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் இந்த செயற்கை கோள்களை கண்டுபிடித்து உள்ளனர்.

இது 2022-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி. அல்லது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. இதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் ஏற்கனவே 3 முறை வெற்றிகரமாக செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த 75 செயற்கை கோள்களும் அனுப்பும் போது விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டுவோம்.

அதுமட்டுமின்றி 75-வது சுதந்திரதின கொண்டாட்டம் விண்வெளித்துறையில் முக்கியத்துவம் பெற்றதாக அமையும். மாணவர்கள் தயாரித்து உள்ள இந்த செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் செலவினை இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். அவருடன் அவருடைய மனைவி வசந்தி அண்ணாதுரை, உறவினர்கள் சிவஞானம், அருண்குமரேஷ் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். https://www.isro.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/