ஈரோடு சூன் 19: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக 7.22 லட்சம் பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 11 மாவட்டம் தவிர, 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இருப்பினும், பெற்றோர்கள் மட்டும் பள்ளிக்கு சென்றும், போன் மூலமும் மாணவர் சேர்க்கைக்கான பதிவு செய்கின்றனர்.இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து ஈரோடு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி மாவட்டங்களுக்கும் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக 2 லட்சத்து 22 ஆயிரத்து 840 பாடப்புத்தகம் வந்துள்ளன.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல், இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்கள், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 725ம், ஆறு, ஏழாம் வகுப்புக்கு மூன்று தொகுதிகளும் சேர்த்து 79 ஆயிரத்து 950 பாடப்புத்தகமும், எட்டாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, 2 லட்சத்து 83 ஆயிரத்து 500 புத்தகங்கள் வந்தன.பிளஸ் 2 வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் முதல் தொகுதி இயற்பியல் இரண்டம் தொகுதி, வேதியியல் இரண்டாம் தொகுதி, தாவரவியல், விலங்கியல், உயிர் தாவரவியல் ஆகியவை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 800 புத்தகங்கள் வந்துள்ளன.பிளஸ் 1 வகுப்புக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 865 பாடப்புத்தகங்கள் என வந்துள்ளன.இவை மாநகராட்சி பள்ளி, தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகம் என பல்வேறு இடங்களில் பிரித்து வைத்து, லாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே