ஈரோடு நவ 9:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும் நீர் திறக்கப்பட்டு வந்தது. தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு 2 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது.

கடந்த மூன்று நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 4 ஆயிரம் கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கி உள்ளது.

இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,757 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 6 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பவானி ஆற்றுக்கு 6,500 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10,000 கன அடிக்கு மேல் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பவானி கரையோரம் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை நீர் நிலைகளில் குளிப்பாட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெரிய அளவு மழை பெய்யாவிட்டாலும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வரட்டுப்பள்ளம் பகுதியில் -4.2, பவானியில் – 1.4, கோபியில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/